Friday, January 8, 2010

நம்ம ஆளு

சென்ற வாரம் ஒரு நாள் என்னோட அப்பாவை பாண்டிச்சேரில உள்ள ஒரு மருத்தவமணைக்கு அழைச்சிகிட்டு போய் இருந்தேன்.அப்பாவ டெஸ்ட் பண்ண மருத்துவமனை ஊழியர்கள் உள்ளே அழைச்சிட்டு போய்டாங்க.. டெஸ்டிங் ஒரு மணி நேரம் அங்க மற்ற யாருக்கும் அனுமதி இல்ல அதனால வெளில இருந்த சேர்ல உக்கார்ந்து இருந்தேன்.

அப்போ பக்கத்துல ஒருத்தர்.. ஐம்பது வயசிருக்கும் அவரோட மனைவிய உள்ள அனுப்பிட்டு அவரும் என் கூட உக்கார்ந்து இருந்தாரு.நாங்க ரெண்டு பேரு தான் அந்த வராண்டாவுல இருந்தோம்.

நான் வழக்கம் போல என்னோட மொபைல் போன் எடுத்து நோண்டிகிட்டு இருந்தேன்.. அவரும் எதோ பேப்பர் கைல வச்சிக்கிட்டு பார்த்துகிட்டு இருந்தார். அவருக்கு ரொம்ப "போர்" அடிச்சிருக்கும் போல.. தம்பி அப்பாவுக்கு என்ன? என்று பேச்சை ஆரம்பிச்சாரு.. நானும் அவரோட வயசுக்கு மரியாதை கொடுத்து என்னோட மிக "முக்கியமான" வேலைய பாதில நிறுத்திட்டு அவர் கிட்ட பேசுனேன்.

பேச்சு ஊரு, படிப்பு, வேலை பத்தி எல்லாம் போச்சி. நானும் அவரு கேட்டதுக்கு எல்லாம் பதில் சொல்லிக்கிட்டு இருந்தேன். அப்புறமா அவரு கேட்ட ஒரு கேள்வி தான் ஹை-லைட்.. நான் பதில் சொல்ல விரும்பாத கேள்வியும் கூட .

என்னை இப்போ தான் அவரோட வாழ்நாளுல முதல் முறையா பாக்குறாரு.. பேசி ஒரு பத்து நிமிஷம் கூட ஆகல. ஆனா இதுவரை அறிமுகம் இல்லாத ஒருத்தன் கிட்ட கொஞ்சம் கூட வெட்கபடாம அவரு கேட்ட கேள்வி.. தம்பி நீங்க "என்ன" ஆளுங்க?

நான் பதில் சொல்லாமல் சிரித்து விட்டு மீண்டும் என்னோட மொபைல நோண்ட தொடங்கினேன்.. அப்போவும் விடாமல் தம்பி நீங்க பார்த்தா "நம்ம ஆளு" மாதிரி தெரியிறிங்க.. சொந்த ஊரு வேற "நம்ம " பக்கம்னு சொல்றிங்க. அங்க "நம்ம ஆளுங்க" தான அதிகம்.. எனக்கு இப்போவும் அங்க நிறைய சொந்தகாரங்க இருக்காங்க தம்பி என்றார்.

நான் அமைதியாக சார் "இந்த" மாதிரி கேள்விக்கெல்லாம் நான் எப்போவும் பதில் சொல்றது இல்ல என்றேன்.

என்ன தம்பி இதுக்கு போய் கோச்சிகிறிங்க? நம்ம நாட்ல ஒரு மனுஷன் பிறந்ததுல இருந்து இறக்கிற வரைக்கும் "இதோட" அடையாளம் இல்லாம இருக்க முடியுமா? அட சும்மா சொல்லுங்க நீங்க "நம்ம" ஆளுதான? , என்றார்.


நானும் கோபத்தை கட்டுபடுத்திகிட்டு சார் இப்போ தான் என்னை பாக்குறிங்க அறிமுகம் இல்லாத ஒருத்தர்கிட்ட அதுக்குள்ள எப்படி இதெல்லாம் கேக்குறிங்க? என்றேன்.

என்ன தம்பி இப்படி சொல்லிடிங்க..இதுல என்ன தப்பு இருக்கு? என்னைக்குமே நம்ம நாட்டுல "இது" தான் தம்பி எல்லா அரசியல் கட்சிகளுக்கும் முதலீடு.. "இதை" ஒழிக்கிறோம்னு சொல்லி தான் வோட்டு கேப்பாங்க ஆனா "இது " இல்லாம எவனும் அரசியல் பண்ண முடியாது. நம்ம தொகுதிய எடுத்துக்கோயேன் " நம்ம" ஆளுங்க சப்போர்ட் இல்லனா "இவன் " அங்க வந்து ஜெயிச்சி இருக்க முடியுமா என்று கேட்டு முழுமையாக என்னை "அவங்க" என்றே ஆக்கி பேச்சை தொடர்ந்து கொண்டு இருந்தார்.

இதற்கு மேலும் தாங்கமுடியாமல் வேண்டுமென்றே சார் என்னோட அப்பா அம்மாவோடது காதல் திருமணம். அப்பாவும் அம்மாவும் வேற வேற மதத்தையும், இனத்தையும் சேர்ந்தவங்க. இப்போ சொல்லுங்க "நான் யாரு"? என்றேன்.

அதற்கும் சளைக்காமல் அப்பா என்ன "ஆளோ" அது தான் தம்பி பிள்ளைங்களுக்கும் என்றார்.

அப்படினா நான் "உங்க ஆளு " இல்ல என்றேன் அமைதியாக .

அதுவரை என்னை "நம்ம ஆளாக " நினைத்து பாசம் கொட்டியவர். திடீர் என்று பேச்சை நிறுத்திக்கொண்டு அவர் வச்சி இருந்த பேப்பர்-ஐ மீண்டும் மேய தொடங்கினார். நானும் நிம்மதியாக என்னோட மிக முக்கியமான வேலையை தொடர்ந்தேன்.

இது போன்று பல சந்தர்பங்களில் பலர் "இதே " கேள்வியை என்னிடம் கேட்டு இருகிறார்கள். குறிப்பாக சேலம், ஈரோடு,கோயம்புத்தூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் (நான் அடிக்கடி போகும் இடங்கள் ) இந்த கேள்வி என்னிடம் பல தடவை கேட்கபட்டு இருக்கிறது.

ஆனா யோசிச்சி பார்த்தா அவரு சொன்னது உண்மை தான். எப்போவுமே "இது" இல்லாம நம்ம நாட்டுல அரசியல் இல்ல. இருந்தாலும் ஒருத்தரை பார்த்ததும் அவரிடம் "மதம்" மற்றும் "ஜாதி" ரீதியாக அணுகும் இவரை போன்ற ஜென்மங்கள் எப்போ தான் திருந்துவாங்களோ?

இதற்கு கருத்து சொல்ல விரும்புபவர்கள் பெரியாரோ, பாரதியோ மீண்டும் பிறந்து வந்தால் தான் நாடு திருந்தும் என்ற ரீதியில் கருத்து இடவேண்டாம். என்னை பொறுத்த வரை அவர்கள் இருவருமே முயன்ற வரை மட்டுமே முயற்சி எடுத்தவர்கள் அதனால் "ஜாதி ஒழிப்பு" போரில் முழுமையாக தோற்று போனவர்கள்.

நாமும் முயன்ற வரை என்று இல்லாமல் முழுமையான முயற்சி எடுத்துது "இது" இல்லாத இந்தியாவை உருவாக்க உறுதி எடுப்போம்.

புத்தாண்டு வாழ்த்துக்கள் :)

21 comments:

வினோத் கெளதம் said...

செம செம..இந்த பதிவை வருஷத்தின் முதல் பதிவா போடுறத விட்டுட்டு..
உன்னோட சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்னு( வேற எதாச்சும் இருக்கா)..:)))

வினோத் கெளதம் said...

ஆனா எல்லோருமே இந்த கேள்வியை அவ்வப்பொழுது எதிர்க்கொள்ள தான் செய்கிறோம்..
கேள்வி கேக்குறது மட்டும் இல்லை மனசளவில் இதை தூக்கி போட வேண்டும்..
நிறையா மாற வேண்டியது இருக்கு..நிறையா பேர் ஊருக்கே உபதேசம் பண்ணுவாங்க..ஆனா இதே மாதிரி விஷயங்களில் தாழ்ந்து போய் இருப்பார்கள்..மனுஷனை மனுஷனா பார்த்தாலே போதும்..

வினோத் கெளதம் said...

நான் கூட வேற எதுவோ "ஏடாகூடமா" கேட்டுடரோனு பார்த்தேன்..

சீமான்கனி said...

//மனுஷனை மனுஷனா பார்த்தாலே போதும்..//

தூள் அருமையான பதிவு நண்பா...யாரோ முகம் தெரியாதவங்கலவிட நம்ம நண்பர்களின் பெற்றோர்களோ உறவினர்களோ கேட்ட்கும் பொது எறியும் பாருங்க....

பிரபாகர் said...

நண்பா,

உங்களின் கோபம் நியாமானதே... இன்றைய இளைஞர்கள் அவ்வாறு கேட்பதில்லை என்பதை நினைவில் வையுங்கள். அவர் வயதில் பெரியவர் என சொல்லியிருக்கிறீர், அவருக்கு தெரிந்தது அவ்வளவுதான்... கூல் டவுன்! கேட்பது முறையற்ற செயல் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

பிரபாகர்.

jothi said...

//என்னை பொறுத்த வரை அவர்கள் இருவருமே முயன்ற வரை மட்டுமே முயற்சி எடுத்தவர்கள் அதனால் "ஜாதி ஒழிப்பு" போரில் முழுமையாக தோற்று போனவர்கள்.//

அவர்கள் தோற்கவில்லை. உண்மையில் நாம்தான் தோற்றுப்போனோம். அன்றைய சூழ்னிலையில் அந்த அளவிற்கு அவர்கள் பண்ணிய புரட்சியே பெரிய விஷயம். நம் பங்களிப்பு ஒன்றுமே இல்லாமல் அது சாத்தியமில்லை. ஓசை வர இரு கைகளுமே அவசியம். ஒரு கையை மட்டும் குற்றம் சொல்லி பலனில்லை.

ஆனால் இதே கேள்வியை நிறைய பேர் என்னிடம் கேட்டு உள்ளனர். பொதுவாக பெரியவர்கள் (50 வயசு) மட்டுமே இந்த கேள்வியை கேட்கிறார்கள். இளைஞர்களிடம் இந்த பிரச்சனைகள் இல்லை. நாளாக நாளாக பெருகிவரும் காதல் திருமணங்கள் இதை ஓரளவிற்கு நிவர்த்தி செய்யலாம்.

புத்தாண்டில் நல்ல பதிவாய் ஆரம்பித்து உள்ளீர்கள். தொடர்ந்து சிறப்பாக எழுத வாழ்த்துக்கள்.

பாலா said...

@என்னை கேட்டாங்கன்னா... ‘மனுஷ ஜாதி’ன்னு சொல்லுவேன். நாங்க யாருன்னு கேட்டா... பயப்படாம ‘அற்றினை’ன்னு சொல்லுவேன்.

அஞ்சலியை இந்தியாவில் படிக்க வைக்கக் கூடாதுன்னு நினைக்கக் காரணம்.. அங்க ஜாதி/மதம் பெயரை கொடுக்கணும்னு கட்டயாப் படுத்துவதால்தான்.

இந்த ஊரில்... அது மாதிரி எந்த அடையாளமும் இல்லாம வாழலாம் (கருப்பு-வெள்ளையை தவிர்த்து).

பாலா said...

ஆமா.. புள்ள என்ன... திடீர்ன்னு மெசேஜ் சொல்லுது..???

Prabhu said...

ஒதுக்கீடு இருக்கும் வரை எல்லோரிடமும் எங்கே போனாலும் அரசே சாதி கேட்கும். அப்போ கஷ்டம் தானே? ஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனா நிலைமை இதுதான். பல பேருக்கு இதத் தெரிஞ்சுகிட்டு ஒண்ணும் இல்லை, எந்த வித்தியாசம் பார்ப்பதில்லைன்னாலும் டைம்பாஸுக்கு கேக்குறாங்க! நம்ம ஊரில் இது ஒரு ஐடண்டி மாதிரி ஆயிடுச்சு. ம்ஹூம்.... கஷ்டம்.

என் நடை பாதையில்(ராம்) said...

1000 பாரதியார், காமராஜர் வந்தாலும் இந்த உலகத்துல எது அழிஞ்சாலும் அழியும், சாதியும் மதமும் மட்டும் அழியாது. அது மானம் கெட்ட மக்களின் இரத்தத்தில் கலந்து விட்டது.

டவுசர் பாண்டி said...

தலீவா !! நீங்க பாண்டிசேரிலியா கீறீங்கோ !! அப்போ கண்டிப்பா நீங்க நம்ப ஆளு தாம்பா !! ( ஹி, ஹி நானு சல்பேட்டா !! குருப்ப
சொன்னேம்பா !! )

என் நடை பாதையில்(ராம்) said...

நீங்க உங்க ‘ஆளுக்கு’ sms பண்றப்ப “நீங்க என்ன ஆளு தம்பின்னு” அவர் கேட்டது தப்புதான். அந்த கோவதுல ஒரு பதிவே போட்டிடீங்களே...! ஹி! ஹி! சும்மானாசுக்கும்...

நல்ல பதிவு...

சுப தமிழினியன் said...

//ஆனால் இதே கேள்வியை நிறைய பேர் என்னிடம் கேட்டு உள்ளனர். பொதுவாக பெரியவர்கள் (50 வயசு) மட்டுமே இந்த கேள்வியை கேட்கிறார்கள். இளைஞர்களிடம் இந்த பிரச்சனைகள் இல்லை.//

ஒட்டு மொத்தமாக இளைஞர்களிடம் இந்த பிரச்சினை இல்லை என்று சொல்லிவிடாதீர்கள், என்னிடம் சாதி என்னவென்று கேட்ட என் வயதொத்தவனை எனக்குத் தெரியும், அந்தச் சாதிக்காரப் பயலோட என்னால ரூம் மேட்டா இருக்க முடியாது, எனக்கு வேற ரூம் வேனும்னு கேட்ட ஹாஸ்டல்ல தங்கி காலேஜ் படிக்கும் பையனையும் நான் பாத்திருக்கேன், அந்தச் சாதிக்கார பையன் எப்படி சேர்மேனா வரலாம் என உள்ளடி வேலைகள் பார்த்துக்கொண்டு கல்லூரிக்குள் சுற்றிய பலரையும் நான் பார்த்திருக்கிறேன்.

பாலா சொன்னது போல, அங்கே கருப்பு-வெள்ளை வேறுபாட்டைத் தவிர வேறெதுவுமில்லைன்னா அதுக்குக் காரணம், அந்த நாடுகள்ள மதம் மணிதர்களுக்குள்ள நீள வாக்கில் மட்டும் சுவரேற்படுத்தி வச்சிருந்தாங்க, ஆனா இந்தியாவுல மட்டும் தான், நீள வாக்குலயும் , அகல வாக்குலயும் சுவரைக் கட்டிபிட்டு, ஒரு சதுரத்துக்குள்ள ஒரு மணிதனை அடைச்சுட்டு பிரிவினையை அதிகமா ஆக்கிடுச்சு.

சாதி ஒரு சர்க்கரை நோய் மாதிரி பரம்பரை பரம்பரையா வந்துகிட்டு இருக்கு, இன்னைக்கு இளைஞனா இருக்குறவன் இன்னொரு 15 வருடம் பொறுத்து இதே கேள்வியைக் கேட்கத்தான் செய்வான். சாதி உள்ளுக்குள்ள ஊறிகிட்டு இருக்கற வியாதி, அது எனைக்காவது ஒரு நாள் வெளிய தெரிஞ்சுடுது. இந்த வியாதில இருந்து சிலர் மட்டுமே தப்பிக்கிறாங்க. விதிவிலக்குகள் எல்லா இடத்துலயுமே இருக்கும் இல்லை.

சுப தமிழினியன் said...

சாதி ஒரு சர்க்கரை நோய் மாதிரி பரம்பரை பரம்பரையா வந்துகிட்டு இருக்கு, இன்னைக்கு இளைஞனா இருக்குறவன் (இந்தக் கேள்வியை இன்னைக்குக் கேட்காதவன்) இன்னொரு 15 வருடம் பொறுத்து இதே கேள்வியைக் கேட்கத்தான் செய்வான். சாதி உள்ளுக்குள்ள ஊறிகிட்டு இருக்கற வியாதி, அது எனைக்காவது ஒரு நாள் வெளிய தெரிஞ்சுடுது. இந்த வியாதில இருந்து சிலர் மட்டுமே தப்பிக்கிறாங்க. விதிவிலக்குகள் எல்லா இடத்துலயுமே இருக்கும் இல்லையா?

kishore said...

@வினோத்கெளதம்

//செம செம..இந்த பதிவை வருஷத்தின் முதல் பதிவா போடுறத விட்டுட்டு..
உன்னோட சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்னு( வேற எதாச்சும் இருக்கா)..:)))//
நன்றி மச்சி.. முதல் பதிவா போட்ருக்கலாம் தான் அதுக்குள்ள நண்பனோட "அன்பு " தாங்க முடியாம அவரோட பதிவ போடா வேண்டியதா போய்டுச்சி..

வேற எதசும? டேய் இந்த நக்கல் தான வேணாங்கிறது ..

// ஊருக்கே உபதேசம் பண்ணுவாங்க..ஆனா இதே மாதிரி விஷயங்களில் தாழ்ந்து போய் இருப்பார்கள்..மனுஷனை மனுஷனா பார்த்தாலே போதும்..//

உண்மை தான் மச்சி.. சீக்கிரம் அந்த காலம் வரும்னு நம்புவோம்

//நான் கூட வேற எதுவோ "ஏடாகூடமா" கேட்டுடரோனு பார்த்தேன்..//
அந்த ஆளு "இது" பத்தியே பேசுனாரு.. நீ "அது" பத்தியே எப்போவும் நினச்சிக்கிட்டு இருக்குற..

@seemangani
//தூள் அருமையான பதிவு நண்பா...யாரோ முகம் தெரியாதவங்கலவிட நம்ம நண்பர்களின் பெற்றோர்களோ உறவினர்களோ கேட்ட்கும் பொது எறியும் பாருங்க...//
உண்மை நண்பா.. எனக்கும் இது போன்ற அனுபவம் ஏற்பட்டதுண்டு



@ பிரபாகர்
//இன்றைய இளைஞர்கள் அவ்வாறு கேட்பதில்லை என்பதை நினைவில் வையுங்கள் //
நன்றி நண்பா. உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. எனக்கு தெரிந்த "நண்பர்கள்" :( சிலரே மற்றவரிடம் கேட்கும் முதல் கேள்வி இது தான். அதிலும் இளவயது ஆண்களை விட பெண்கள் தான் இந்த கேள்வியை முன் வைத்து பழகுகிறார்கள்

kishore said...

@ஜோதி

உண்மை தான் ஜோதி.. மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் தனிமனித முழக்கம் முழு வெற்றியை தராது என்பதற்கு இவர்களின் தோல்வியே உதாரணம் .

சில சமயங்களில் காதல் திருமணமும் இதற்கு விதிவிலக்கு இல்லை. அவங்க "நம்ம ஆளா" ன்னு பார்த்து தான் சிலருக்கு காதலே வருது.

உங்கள் வாழ்த்திற்கு நன்றி :)

@ஹாலிவுட் பாலா

வெளி நாட்டில் இந்த பதிலை சொல்வது சுலபம் பாலா. ஆனால் நம்ம நாட்டில் ? :(

இந்தியாவில்.. குறிப்பாக தென் இந்தியாவில் தரமான கல்வி கிடைகிறது பாலா.
ஆனால் அது வசதி படைத்தவர்களுக்கு மட்டும் தான். சில இடங்களில் வசதி இல்லாதவர்களுக்கும் தரமான கல்வி கிடைகிறது. ஆனால் எங்கயும் "இன" அடையாளம் கேட்காத கல்வி நிறுவனங்கள் இல்லை :((

//ஆமா.. புள்ள என்ன... திடீர்ன்னு மெசேஜ் சொல்லுது..???//

விடுங்க.. என்னைக்காவது தான் எனக்கே இப்படி எழுத தோணுது.. வேணாம்னா சொல்லுங்க ஆயிரம் கவிதை ரெடியா இருக்கு :)))

@ பப்பு

அரசு இட ஒதுக்கீடு செய்த காரணம் எல்லோருக்கும் சமசீர் கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக.. ஆனால் இன்றைய நிலைமை?

@என் நடை பாதையில்(ராம்).

நன்றி ராம் :)
ஏன் பாரதியும் , பெரியாரும், காமராஜரும் மட்டுமே குரல் கொடுக்கணும்னு நினைக்கணும்?
சீக்கிரம் அந்த கிருமி நம்மிடம் இருந்து நீங்க நாமும் முயற்சி எடுப்போம்.

@டவுசர் பாண்டி

வாங்க டவுசர்.. நான் பக்கத்துல சிதம்பரம். ஹா.. ஹா.. நான் உங்க ஆளுதான் ஏன்னா நீங்க உங்க பதிவுல சொல்ற எல்லா விஷயத்தையும் உடனே செஞ்சி

# @ என் நடை பாதையில்(ராம்).

//நீங்க உங்க ‘ஆளுக்கு’ sms பண்றப்ப “நீங்க என்ன ஆளு தம்பின்னு” அவர் கேட்டது தப்புதான். அந்த கோவதுல ஒரு பதிவே போட்டிடீங்களே...! ஹி! ஹி! சும்மானாசுக்கும்...//

நான் ஒரு நிமிஷம் ஷாக் ஆகிட்டேன்.. இது எப்படி உங்களுக்கு தெரியும்னு.. கடைசி வரிய படிச்ச அப்புறம் தான் நானா உளறிடேனு தெரியுது..

@ சுப தமிழினியன்

நன்றி சுப தமிழினியன் .. உங்கள் கருத்துகளை முழுமையா அமோதிக்கிறேன்.
விதிவிலக்குகள் என்பது தனி மனிதன் எடுக்கும் முடிவால் மட்டுமே சாத்தியப்பட கூடிய விஷயம்

கண்ணா.. said...

அருமையான பதிவுடா கிஷோர்

நச்சுன்னு சொல்லிட்ட


என்வரையில் ‘இது’ இளையதலைமுறையில் கொஞ்சம் குறைந்துள்ளது. இது மேலும் குறைய வேண்டும் அதுதான் அனைவரின் ஆசையும்.

கண்ணா.. said...

//அவர்கள் இருவருமே முயன்ற வரை மட்டுமே முயற்சி எடுத்தவர்கள் அதனால் "ஜாதி ஒழிப்பு" போரில் முழுமையாக தோற்று போனவர்கள்.//

என்னால் இதை ஏற்று கொள்ள முடியாது.

அவர்கள் முயற்சியால்தான் இப்போது நாம் ‘அதை’ உபயோகிக்க வேண்டிய அவசியம் குறைந்துள்ளது

கலையரசன் said...

நானா இருந்தா என்ன சொல்லியிருப்பேன்னா...

"நான் உங்க ஆளுதாங்க.. ஆம்பளைங்க! சந்தேகம் இருந்தா..."

ஆண்டின் முதல் இடுகையாய் இது இருந்திருக்கலாம்..

kishore said...

@ கண்ணா..
நன்றி கண்ணா..
ஆனா ஒரளவுக்கு வெற்றி.. கொஞ்சமா தோல்வினு.. எப்படி சொல்ல முடியும்? ஒரு விஷயம் முழுமையா செஞ்சி முடிச்சாதான் அது வெற்றி.

kishore said...

@ கலையரசன்

ஹா.. ஹா.. நீ செய்வடா ..

அவரு வயசுக்கு மரியாதை குடுத்து பேசுனது தான் தப்பா போச்சி..

ஆண்டின் முதல் பதிவா இருந்து இருக்கலாம் தான். உனக்கே தெரியும் நண்பன பத்தி.. அவன் சொல்றத செய்யலனா அவனும் அமைதியா இருக்கமாட்டான் நம்மளையும் நிம்மதியா இருக்க விடமாட்டான். "போன்"ன எடுத்து காதுல வச்சா அவன் பேசுறத கேக்க முடியாது.. அப்படி ஒரு அன்பு செலுத்துவான் :)