Monday, May 3, 2010

செண்பக பூ..


"மஹா.."

"ம்ம்.."

"ஏய்.. உன்னைதாண்டி.."

"சொல்லுடா..."

"கொஞ்சம் நிமிர்ந்து பாரேன்.."

"சொல்லு.."

"ப்ளிஸ்.. ஒரே ஒரு தடவ நிமிர்ந்து பாரேன்.."

"சிவா என்னனு சொல்லி தொலையேன்.. பக்கத்துல தான இருக்கேன்.."

"இல்ல என்ன பாரு அப்போ தான் சொல்லுவேன்.."

"சரி இப்போ சொல்லு.."

"நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?"

"கல்யாணமா...? என்ன சிவா விளையாடுறியா ?"

"இல்லடி நிஜமாதான் சொல்றேன்.. நாம ரெண்டு பெரும்
கல்யாணம் பண்ணிக்கலாம்.."

"சிவா உன்னை எனக்கு பிடிக்கும்.. அதனால தான் நீ கூப்பிட்டதும் வந்தேன்.. ஆனா நீ இப்படி திடிர்னு கேப்பன்னு நினைச்சி கூட பாக்கல .. இதெல்லாம் நம்ம ரெண்டு பேருக்கும் ஒத்து வராது சிவா.. நாம இப்படியே இருப்போம்.."

"இப்படியேனா?"

"இப்படி தான்.. நீ சிவா..நான் மஹா.. அது போதும்.."

"இல்ல .. இப்படி வெறும் சிவா.. மஹான்னு இருக்குறத விட.. மகாலட்சுமிசிவராமன்னு மாறனும்.."

"அது இந்த ஜென்மத்துல நடக்காது சிவா.."

"ஏன் நடக்காது?"

"ஏய்.. என்னை பத்தி தெரியும்ல.."

"தெரியும்.. "

"என்ன தெரியும்?"

"நீ மஹா.."

"அப்புறம்?"

"வயசு 26"

"அப்புறம்?"

"நான் சிவா.. வயசு 29 .. உன்னை கல்யாணம் பண்ணிக்க போறேன்.."

"ப்ச்.. என்னை பத்தி சொல்லு"

"அது.."

"ம்ம்.. அது.. "

"அது"

"சொல்லு.."

"அது.."

"சரி நானே சொல்றேன். நான் மஹா வயசு 26.. என்னோட கஸ்டமர்ங்க கிட்ட சொல்ற வயசு 22.. நான் சம்பாதிக்கிறேன்.. என்னோட உடம்ப வித்து.. பெத்த அப்பனே என்னை இந்த தொழில்ல கொண்டு வந்து விட்டுட்டான்.. நேத்து ராத்திரி வரைக்கும் பேர் தெரியாத யார் யாரோ என்னோட புருஷன்.. இன்னைக்கு யாருன்னு தெரிஞ்சிக்க இதோ இங்க உக்கார்ந்து இருக்கேன்.. சரியா? "

"......."

"நீ சிவா.. படிச்சவன்.. அழகானவன்.. நல்ல குடும்பத்துல பிறந்தவன்.. நல்ல வேலைல இருந்து நிறைய சம்பாதிகிறவன்.. என்னோட ஒன்னா படிச்சவன்.. போன மாசம் திடிர்னு என்னை வழில பார்த்து பேசி பழகி. என்னை பத்தி தெரிஞ்சதும் விலகாம இப்போ கல்யாணம் பண்ணிகிறேன்னு சொல்றவன்.."

"........."

"சிவா.. சினிமாவுல தான் இதெல்லாம் பார்க்க நல்லா இருக்கும்.. ஆனா இது நிஜம்.. நிதர்சனம்... யோசிச்சி பாரு.. நான் என்ன தொழில் பண்றேன்னு தைரியமா சொல்றதுகே உன்னால முடியல .. நாளைக்கு கல்யணம் ஆகி நாம ரெண்டு பெரும் இதே தெருவுல போனா.. சத்தியமா புருஷன் பொண்டாட்டி போறங்கன்னா சொல்லுவாங்க? இன்னைக்கு எவனையோ பிடிசிட்டான்னு தான் பேசுவாங்க..
அப்படி பேசும் போது உன்னால தாங்க முடியுமோ இல்லையோ.. என்னோட மனச மட்டும் உண்மையா நேசிக்கிற ஒருத்தன் மனசு ஒடிஞ்சி போறத தினம் தினம் என்னால பார்க்க முடியாது சிவா.. அதுக்கு இன்னும் கொஞ்ச காலம் இந்த நரகத்துலயே வாழ்ந்து செத்து போய்டுறேன்டா .. ப்ளீஸ்.. "

"............"


"சிவா.. இப்போ கூட நீ சரின்னு சொன்னா உன்னோட படுக்க தயாரா இருக்கேன்.. சத்தியமா ஒரு கஸ்டமர் கூட படுக்குறதா நினைச்சி இல்ல. என்னையும் மனசார நேசிச்ச ஒரு மனசுக்கு நான் தர காணிக்கையா நினைச்சி.. இது தகுதியான காணிக்கை இல்லன்னு என்னக்கு தெரியும்.. யார் யாரோ.. எப்படி எப்படியோ கசக்கி பிழிந்த உடம்பு இது.. ஆனா உனக்கு கொடுக்க என்கிட்ட இந்த உடம்ப தவிர வேற ஒன்னும் இல்ல.."

" எனக்கு தேவை இந்த உடம்பு மட்டும் இல்ல மஹா.. உன்னோட மனசும் தான்"

"பொண்ணுங்கள " பூ " ன்னு சொல்லுவாங்கடா .. நான் அதுலயும் ஸ்பெஷல் கேட்டகிரி .. நான் "செண்பக பூ" டா கசக்கி பிழிய பிழிய வாசம் குடுத்துகிட்டே இருப்பேன்..வாசனை தீர்ந்து போகுற வரைக்கும் பல பேரு கசக்கி மோந்து பார்பாங்க.. காஞ்சி போனதும் குப்பைக்கு போய்டுவேன்.."

"இன்னிமே என்னோட வாழ்க்கைல உன்னை பார்க்க விரும்பலடா.. என்னை உண்மைய நேசிச்ச ஒரு மனசு இருக்குங்குற ஒரே சந்தோசம் போதும் எனக்கு.. நீ நல்லா இருக்கனும்.. சந்தோசமா இருக்கனும்.. நான் கிளம்புறேன்.. சத்தியமா உன்னை திரும்ப சந்திக்க மாட்டேன்".

கண்களை துடைத்தவாறு இவன் முகம் பார்க்காமல் திரும்பி செல்லும் மஹாவை பார்த்து கொண்டே இருப்பதை தவிர வேற ஒன்றும் தோணவில்லை அவனுக்கு.

Wednesday, March 31, 2010

கட்டிங் வித் கிஷோர் - 5

சந்தோசம்

கொஞ்ச நாளா மனசு உண்மையா சந்தோஷபடுற மாதிரி சில சம்பவங்கள் நடந்துகிட்டு வருது.. ஆமாங்க.. என்னோட நண்பர் ஒருத்தருக்கு திருமண பேச்சு வார்த்தை நடைபெற்று வருது.. ஏற்கனவே வீட்டுல முடிவு பண்ணிட்டாலும் பொன்னும் பையனும் பேசி புரிஞ்சிக்கிட்டு அவங்க சம்மதம் சொல்லட்டும்ன்னு வெயிட் பண்றாங்க.. எங்க சைடுல பையன் தான் கொஞ்சம் கிறுக்கு புடிச்சவன்.. எதையும் திடமா முடிவுபண்ணி சொல்ல மாட்டான் (தெரியாது ).. அதனால பையன் என்ன சொன்னாலும் கல்யாணம் நிச்சயம் நடக்கும்.
எப்படியும் நிச்சயமா சரக்கும்,புது டிரஸ்சும் கிடைக்கும்.. சோ மீ வெய்டிங் பார் தட் டே :) .. கண்டிப்பா கல்யாணம் முடிவு ஆனதும் பையன் யாருன்னு சொல்றேன்.. அதுவரைக்கும் வீணா என்னோட நண்பர்கள் பேர இழுத்துடாதிங்க.. :)

கொஞ்சம் கஷ்டம்

என்னோட போன பதிவுல வாங்கிய ஓட்டு எண்ணிக்கை 16.. ஆனா வந்த கமெண்ட் மொத்தம் 5.. அதுவும் அனுப்புனது 3 பேரு. காரணம் நீங்க நினைக்கிறது தான்.. நான் யாரோட பதிவுக்கும் போய் கமெண்ட் பண்றது இல்ல.

ஆனா உண்மை நிலவரம் என்னன்னா.. நான் follow பண்ற எல்லோரோட பதிவையும் படிக்கிறேன்.. ஆனா எனக்கு பிடிச்ச பதிவுகள்ள என்னால கமெண்ட் பண்ண முடியாததற்கு காரணம் அவங்களோட template -ல comment form placement -ல popup window அல்லது embeded ஆக இருப்பது தான். அப்படி இருந்தால் என்னால் comment செய்ய இயலவில்லை.. full page இருந்தால் மட்டுமே comment பண்ண முடிகிறது.. அதே போல தமிலிஷும் வோட்டு போடுவதற்கு குறைந்த பட்சம் 15 முறையாவது கிளிக் செய்ய வேண்டி இருக்கிறது. அப்படி செய்தும் சில சமயம் வோட்டு விழுவது இல்லை..

இதனாலே நல்ல பதிவுகளுக்கு மற்றும் நண்பர்கள் பதிவுகளுக்கு கூட comment பண்ண முடிவது இல்லை.. குறிப்பாக பப்பு, கீதப்ரியன் போன்றவர்களின் பதிவுகள்..

இந்த பிரச்சனைக்கு ஹாலிபாலி எனக்கு மட்டும் தனியாக comment போட வசதி செய்து உள்ளார்..

அதே முறையை எல்லார்கிட்டயும் எதிர்பார்ப்பது கொஞ்சம் இல்ல ரொம்பவே ஓவரா இருக்கும்.. எனவே இந்த இரு பிரச்சனைகளையும் தீர்க்க வழி இருந்தா சொல்லுங்க..


இது என்ன பீலிங்க்னு புரியலங்க..

எவ்ளோ சொல்லியும் கேக்காம எங்க வீட்லயும் எனக்கு தீவிரமா பொண்ணு தேட ஆரம்பிச்சிடாங்க.. பயோடேட்டா மற்றும் போட்டோ கேக்கும் போது எதோ ஒரு ஆர்வத்துல எழுதி குடுத்துடாலும்.. என்னோவோ மனசுல.. சந்தோசம், வெறுமை , பயம் , குருகுறுப்புன்னு எல்லாம் கலந்துகட்டி ஒரு உணர்வு .. இது என்ன பீலிங்க்னே புரியல.. கல்யாணம் ஆனா பெரியவங்க யாரவது இருந்தா இது என்ன பீலிங்க்னு சொல்லுங்க..

மீண்டும் சந்திப்போம் ...

Saturday, March 20, 2010

நான் - நீ - தற்கொலை

ஹலோ எப்படி இருக்கீங்க?
பார்த்து ரொம்ப நாள் ஆச்சி.. அப்புறம்.. வேலை எல்லாம் எப்படி போய்கிட்டு இருக்கு உங்களுக்கு? வீட்ல எல்லாம் நல்லா இருக்காங்களா? எல்லோரையும் விசாரிச்சதா சொல்லுங்க .. ஆமா.. இனிமே நான் விசாரிச்சத சொல்லி என்ன பண்ண போறீங்க.. எல்லோரும் நல்லா இருக்காங்கல்ல அது போதும்..

ஏன் இப்படி பேசுறனா ? ஓ.. நான் இதுவரைக்கும் உங்க கிட்ட சொல்லல இல்ல.. நாளைக்கு நான் இருக்க மாட்டேன்.. இல்லங்க ஊருக்கெல்லாம் போகல.. உலகத்த விட்டே போக போறேன்.. ஆமா இன்னைக்கு ராத்திரி நான் தற்கொலை பண்ணிக்க போறேன்.

ஏன்னு கேட்டா என்ன சொல்றது ? எனக்கு வாழ பிடிக்கல அவ்ளோ தான்..
ச்சே ச்சே.. காதல் தோல்வி.. வேலை கிடைக்கல.. குடும்பத்துல கஷ்டம் இப்படி எந்த அற்பமான காரணமும் இல்லங்க..

அப்புறம் ஏன் இந்த முடிவா? சரி வாங்க உக்கார்ந்து பேசுவோம்..

என்னவோ தெரியலங்க.. கொஞ்ச நாளா.. மனசு ஒரு மாதிரியா இருக்கு.. யார் கூடவும் பேச பிடிக்கல.. தனியா இருக்குற மாதிரி ஒரு பீலிங்..

நல்ல குடும்பம்.. தேவையான அளவுக்கு சம்பளம் வர வேலை, எதையும் பகிர்ந்துக்க நண்பர்கள், சந்தோசமான வாழ்கை ன்னு எல்லாம் இருந்தும் எதோ ஒரு வெற்றிடம் இருக்குற மாதிரி தோணுது மனசுல.. எனக்கும் சில சமயம் சில பேர பார்த்தா தோணுது.. இவன் எல்லாம் எந்த நம்பிக்கைல வாழுறான்? நாம ஏன் சாகனும்னு?ஆனா அப்புறம் ஒரு தனிமை கிடைக்கும் போது யோசிச்சி பார்த்தா சாகனும்னு தோணுதே..

அட போன மாசம் கூட கடை தெருவுல ஒரு புதுசா கல்யாணம் ஆனா ஜோடிய பார்த்தேன்.. பொண்ணு சும்மா ரதி மாதிரி... ஸ்ஸ்ஸ்ஸ்........ என்னத்த சொல்ல... ஆனா அவ புருஷன்.. அந்த கொடுமைய ஏன் கேக்குறிங்க.. அப்போ கூட நினச்சேன்.. இந்த பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வச்சதுக்கு கல்லை கொண்டு அடிச்சி கொன்னுருக்கலாம்னு.. ஆனாலும் அந்த பொண்ணு அவன் கூட சகிச்சிகிட்டு வாழுது .. ஒருவேளை அவளுக்கு புடிச்ச குணம் அவன் கிட்ட இருக்குதோ என்னவோ.. இருந்தாலும் கடவுளோட காம்பினேஷன் செலெக்ஷன் கொடுமைய நினச்சி ரொம்ப கோபம் வந்துசிங்க.

அது கூட பரவாஇல்ல போன வாரம் மார்க்கெட் போய் இருந்தேன்.. தக்காளி கிலோ எட்டு ரூபான்னு வித்துகிட்டு இருந்தவன் ஒரு வெளிமாநிலகாரண பார்த்ததும் kg 15 ருபீஸ்ன்னு இங்கிலிஷ்ல சொல்லி விக்குறான்.அப்போ கூட தோணிச்சி இப்படி ஊரை ஏமாத்தி பொழைக்கிற இவன் எல்லாம் வாழும் போது நான் ஏன் சாகனும்னு.. ஆனாலும் நான் சாக விருப்பபடுறேன்.

இன்னைக்கு காலைல கூட நான் பாட்டுக்கு வண்டில போய்கிட்டு இருந்தேன்.. வழி ஒருத்தன் லிப்ட் கேட்டான் தெரிஞ்சவன்னு நம்பி கூட்டிகிட்டு போனேன்.. பயணம் செஞ்ச 5 நிமிஷத்துல ஒரு சோகக்கதைய சொல்லி 50 ரூபா கறந்துட்டான் . ஏமாந்தது என்னோட தப்பு தான் இருந்தாலும் ஏமாத்துறவன் எல்லாம் சந்தோசமா வாழுற உலகத்துல நான் ஏன் சாகனும்? ஆனாலும் தோணுதே...

இந்த உலகத்துல மனுஷன்ல இருந்து அவன் உருவாக்குன கடவுள் வரைக்கும் யாரும் நல்லவங்க இல்லங்க. எல்லோரும் சுயநலத்தோட தான் மத்தவங்க கிட்ட பழகனும்னு நினைக்கிறாங்க.. அடுத்தவங்க கஷ்டத்துல இவங்களுக்கு ஒரு சந்தோசத்த எதிர்பார்த்து பழகுறாங்க ..

ஆனா எவளோ பேர பார்த்தும் மனசு மாறாத நான் இப்போ மனச மாத்திக்கலாம்னு நினைக்கிறேன்

இப்போ கூட பாருங்க உங்களுக்கு எவ்ளோவோ வேலை இருக்கும் ஆனாலும் நான் தற்கொலை பண்ணிக்க போறேன்னு தெரிஞ்சும் இவ்ளோ நேரம் வெட்டியா உக்கார்ந்து கதைகேட்டு மனசுக்குள்ள சந்தோஷபடுறிங்க பாருங்க. உங்கள மாதிரி ஜென்மம் எல்லாம் உயிரோட இருக்கும் போது நான் ஏன் சாகனும். நான் வாழனும்.. வாழ்வேன்.

Thursday, March 11, 2010

கட்டிங் வித் கிஷோர் - 4

சில வருடங்களுக்கு முன்பு.. என்னோட அக்காவுக்கு கல்யாணம் ஆகி சட்டிஸ்கர் மாநிலம் பச்சேலி என்ற ஊரில் இருந்தார்கள். விடுமுறைக்காக அங்கே சென்று இருந்தேன் .மாமாவிற்கு அடிக்கடி லீவ் போட முடியாத காரணத்தால் எங்களுக்கு வண்டி ஏற்பாடு செய்துவிட்டு வேலைக்கு சென்று விட்டார்.

ஒரு நாள் 100 கிமீ தொலைவில் இருக்கும் சித்திரகோட் பால்ஸ் போவதென்று முடிவு செய்து.. கிளம்பினோம்..நான்,அக்கா எனது நண்பர்கள் இருவர்..
அழகு கொஞ்சும் மலை காடுகளையும் நீர்விழ்சிகளையும் பற்றி இன்னொரு பதிவில் படங்களுடன் சொல்கிறேன் ..
நாங்கள் போன பாதை மலைவாழ் மக்கள் வசிக்கும் காட்டு பகுதி.. சொல்லி வைத்தார் போல் இரண்டு மலைகளை தாண்டியதும் வண்டி மக்கர் செய்து விட.. மலை சரிவில் தூரத்தில் மலைவாழ் மக்களின் குடிஇருப்புகள் தெரிய.. ரேடியேடற்கு தண்ணி எடுப்பதற்காக நானும் என் நண்பர்களில் ஒருவனும் மட்டும் கேன் எடுத்துக்கொண்டு மலை சரிவில் இருந்த மலைவாழ் மக்களின் ஊருக்குள் சென்றோம் .

போகும் வழியில் நமது அரசு அந்த மலைகளிலும் சாலை வசதி தண்ணீர் வசதி செய்து இருப்பதை பற்றி பெருமையுடன் பேசி கொண்டு சென்றோம்.. ஆனால் அது எந்த ஜென்மத்திலும் ஏழைமக்களுக்கு சென்று அடையாத வசதிகள் தான் என்று ஊருக்குள் நுழைந்ததும் புரிந்தது. யாரும் இல்லாத பகுதியில் சாலை வசதிகளும் மின்சார வசதிகளும் செய்து வைத்திருக்கும் அரசு மக்கள் வாழும் பகுதிகளை கண்டு கொள்ளாமல் விட்டது ஆச்சர்யம் (அலட்சியம் ).

கதைகளில் சினிமாக்களில் பார்ப்பதை போல யாரும் எங்களை சுற்றி வளைக்க வில்லை.. மாறாக குறுகிய தலைகளும் சற்றே உப்பிய வையறுமாய் நீண்ட காது மடல்களில் பெரிய வளையங்களுடன் வெள்ளந்தி சிரிப்புடன் இருந்த மக்கள் புதியதாக எங்களை கண்டதும் ஓடி ஒளிந்தது தான் ஆச்சர்யம் . இன்றும் மேலாடை அணியாத பெண்கள்,வாடி வதங்கிய குழந்தைகள் வறுமையின் வறுமையின் அத்தனை நிலைகளையும் காண முடிந்தது.

அவர்களிடம் தூரத்தில் நின்ற வண்டியை காட்டி வாட்டர் கேனையும் காட்டி தண்ணீர் வேண்டும் என்றோம். எங்களை மாறி மாறி பார்த்தவர்கள் நம்பிக்கை வந்தவர்களாய் தண்ணீர் பிடித்து கொடுத்தார்கள்.

எங்களுக்கும் சற்று பயம் நீங்கி அவர்களிடம் பேச்சு கொடுத்தோம். சந்தோசத்தையும் சோகத்தையும் பகிர்ந்து கொள்ள மொழி ஒரு தடை இல்லை என்பதாலோ என்னவோ அவர்களின் நிலையை அவர்களின் புரியாத பாஷைகளிலும் சைகைகளிலும் விளக்க புரிந்து கொள்ள முடிந்தது.

இன்னும் அவர்களுக்கு ஓட்டு உரிமை கிடையாதாம் இவர்கள் ஓட்டு போடும் இயந்திரம் இல்லை அதனால் அரசுக்கு எந்த உபயோகமும் இல்லை என்பதாலும் எந்த விதமான சலுகைகளும் அரசிடம் இருந்து கிடைப்பது இல்லை. வாழ்வோ சாவோ எல்லாம் இவர்களுக்குள்ளே பார்த்து கொள்கிறார்கள் . காட்டில் கிடைக்கும் பழங்களை மலைக்கு கீழே இருக்கும் ஊர்களுக்கு சென்று விற்று அந்த பணத்தில் அவர்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறார்கள்.

நேரம் ஆகி விட்ட படியால் அவர்களிடம் இருந்து விடை பெற்றோம்.. வரும் போது அவர்களிடம் ஒரு கூடை நிறைய நாவல் மற்றும் பலா பழம் வாங்கினோம் அதற்கு அவர்கள் பெற்று கொண்ட தொகை வெறும் இரண்டு ரூபாய் மட்டுமே கட்டாயபடுத்தி கொடுத்ததும் அதிக பணம் வாங்க மறுத்து விட்டார்கள்..
அந்த இடத்தை விட்டு கனத்த மனதுடன் வெளி வந்தோம்.. மீண்டும் காதுகளில் அந்த குழந்தைகளின் வெள்ளந்தி சிரிப்பு சத்தம்..
-----------------------------------------------------------------

நித்தியானந்தா ஜி

சாமியார் நடிகையுடன் படுக்கை அறை காட்சிகள் என்று பத்திரிகைகள் மற்றும் மீடியாக்கள் விளம்பரம் செய்து தங்கள் ரேட்டிங்கை உயர்த்தி கொண்டனர்.

உலகையே தனது பேச்சால் மயக்கிய ஒருவன் எதில் கோட்டை விட்டு இருக்கிறான் என்று நினைக்கும் போது சிரிப்பு தான் வருகிறது.
யாரை குறை சொல்வது?
40 வயது நிரம்பாத ஒருவனை சாமி என்று பின் தொடர்ந்து சென்றவர்களையா ?
அவனை பற்றி கட்டுரைகளும் புத்தகங்களும் வெளியட்ட பத்திரிக்கைகளையா ?
பணமும் புகழும் மரியாதையும் இந்த சமூகத்தில் கிடைத்த பின்பும் அடங்காமல் ஆட்டம் ஆடியவணையா?

யாரையும் தனிப்பட்ட முறையில் குற்றம் சொல்ல முடியாது.. அரங்கேறிய அசிங்கங்களுக்கு மூவருமே காரணம்.

ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன்னால் இவன் பேரில் நில அபகரிப்பு மோசடி செய்தி ஒரு நாளிதழில் வந்த போது கண்டு கொள்ளாமல் இப்பொது மட்டும் இதை செய்தியாக போட்டு தங்களை மக்கள் முன் நியாயஸ்தர்களாக கட்டி கொள்ளும் மீடியாக்கள் வாழ்க..

ஒருவேளை புகழ் பெற்ற நடிகையுடன் இல்லாமல் வேறு பெண்களுடன் இருந்த காட்சிகளை பத்திரிகைகளும் மீடியகளும் இவ்வளவு பிரபலபடுத்தி இருக்குமா என்பதும் சந்தேகம் தான்.

ரஞ்சிதாவை புகழ் பெற்ற நடிகை என்ற ஒரே காரணத்திற்காக முகத்தை கூட மறைக்காமல் முன்னிறுத்தி அந்தரங்க ஆபாசங்களை குடும்பங்களில் சிறு பிள்ளைகள் கூட பார்பார்கள் என்ற அறிவு கூட இல்லாமல் வீட்டின் நடு கூடம் வரை கொண்டுவந்த மீடியாக்கள் காஞ்சிபுரம் பூசாரியுடன் கருவறையில் விளையாடிய குடும்ப "குத்து " விளக்குகளை கண்டு கொள்ளாமல் விட்டது ஏனோ?

நித்தி உனக்கு ஒரு பெர்சனல் அட்வைஸ்.. இப்படி ஓடி ஒளியாம தைரியமா வெளில வந்து மக்கள் கிட்ட செருப்படியோ இல்ல அழுகுன முட்டை வீச்சோ வாங்கிட்டு பாதுகாப்பா ஜெயிலுக்கு போய்டு... நீ ஜெயிலுக்கு போய்டா இந்த மானங்கெட்ட மக்களும் சீக்கிரம் உன்ன மறந்துட்டு வேற எவனாச்சும் புதுசா வருவான் அவன் பின்னாடி போய்டுவானுங்க . நீ அங்க போய் உன்னோட சூப்பர் சீனியர் பிரேம் (பிரேமானந்தா) இருக்காருல்ல அவர பாலோவ் பண்ணி நீயும் ஜெயிலுக்கு பக்கத்துலயே ஒரு ஆசிரமம் வச்சி போலீஸ் பாதுகாப்போட பிசினஸ் பண்ணு.. எவன் என்ன கேப்பானு அப்போ பார்த்துடுவோம்..

எதோ நானும் ஒரு‘வுமனைஸர்’ [பெண்களை நேசிப்பவன் - நன்றி : திரு.சாரு பின் நவீனத்துவ எழுத்தாளர் (என்று ஆள் வைத்து சொல்லிகொள்பவர்) :) ] என்ற முறைல சொல்றேன்.. வீணா பொண்ணுங்க வாழ்க்கைல விளையாடாத..
--------------------------------------------------------------------
ரத்த கண்ணீர்.. இந்த படத்தின் காட்சிகளை அவ்வப்போது பார்த்து இருக்கிறேன் ஆனால் முழு படத்தையும் பார்க்கும் வாய்ப்பு நேற்று அமைந்தது.

M.R.R அந்த காலத்துலயே ஸ்டைல், மானரிசம், டயலாக் டெலிவரி, நக்கல் என்று எல்லாத்துலயும் புகுந்து விளையாடி இருக்கிறார். அம்மாவை கவுன் போட சொல்வதும், மாமாவை வெளியே போக சொல்வதும், இந்திய அரசை கிண்டல் பண்ணுவதுமாய் மனுஷன் பின்னி இருக்கிறார்.
அதிலும் நோய் வந்த பின்பும் அவரின் குசும்பு குறையாத பேச்சை ரொம்பவே ரசிக்க வைத்தார். M.N ராஜம் அவர்களும் தைரியமாக யாரும் நடிக்க தயங்கும் வாய்ப்பை பெற்று அசத்தி இருக்கிறார்..

டேய் நித்தி..உன் படத்த ஊரே பாக்குறது இருக்கட்டும் நீ முதல்ல இந்த படத்த பாரு. you must see this movie..

---------------------------------------
மீண்டும் சநதிப்போம் ..

Tuesday, March 2, 2010

இது தான் காதலா?

அர்ச்சனா ரெஸ்டாராண்ட் ...போன மாதம் கல்யணம் ஆகி இருந்த வினோத்தும் நந்தினியும் வேறு உலகத்தில் இருப்பதாக நினைத்து கொண்டு அந்த ஹோட்டல்லின் கடைசி டேபிள்லில் உணவுடன் உணர்வையும் அசைபோட்டு கொண்டு இருந்தனர் . பேசும் போது எதேச்சையாக எதிர்புறம் பார்வையை செலுத்திய நந்தினிக்கு அதற்கு மேல் அவள் கணவன் வினோத்திடம் சகஜமாக பேசமுடிய வில்லை.. காரணம் எதிர் டேபிள்லில் "சிவா".. அவளின் முன்னால் காதலன்..

சிவாவின் விழிகளில் ஏளனம் .. என்ன இருந்தாலும் என் கூட ரெண்டு வருஷம் சுத்துணவ தான என்ற ஒரு அலட்சிய பார்வை.

அவளை பார்த்தபடியே பேரர் கொண்டு வந்த ஜூஸை பருகினான்.. ஜூஸ் இல் இருந்த சில்லிப்பு அவன் மனதில் இருந்த தீக்கு இரையாகி காணாமல் போய் கொண்டு இருந்தது..
எத்தன நாள் இதே மாதிரி என்கூட ஹோட்டல்ல சாப்பிட்டு இருப்பா? இன்னைக்கு அவன் புருஷன் கூட.. பத்தினி மாதிரி..
இவள் இல்லனா எனக்கு வாழ்க்கையே இல்லன்னு நினைச்சிட்டா போல இருக்கு..
பாருடி நான் சந்தோசமா இருக்கேன்.. இன்னைக்கு நான் அன்னைக்கு இருந்ததை விட அதிகம் சம்பாதிக்கிறேன் .. அன்னை நான் இருந்த நிலைமையை காரணம் காட்டி தான என்னை விட்டுட்டு இன்னொருத்தன கல்யாணம் பண்ணிகிட்ட? இப்போ நான் சந்தோசமா இருக்கேன்.. ஆனா நிம்மதியா இல்லை . நான் இன்னைக்கு இருக்குற நிலைமைய உங்கிட்ட சொல்லி உன்னை அழவச்சி பார்த்தாதான் எனக்கு நிம்மதி. அந்த சந்தர்ப்பதிற்காக தான் காத்துகிட்டு இருக்கேன்..

சிவா நினைத்தபடியே அவனுக்கு சந்தர்பம் அமைந்தது.. வினோத் எதையோ மறந்தவனாய் அவளிடம் சொல்லி விட்டு காருக்கு திரும்ப.. அவள் எழுந்து கை கழுவ சென்றாள்.. இது தான் சரியான் சந்தர்ப்பம் என்று எண்ணியவனாய் மின்னலாய் அவளை பின் தொடர்ந்தான்..

அந்த அறை கதவை திறந்ததும்.. அவன் எதிர்பார்க்காமல் அந்த குரல் கேட்டது..

எப்படி இருக்கீங்க சிவா?-நந்தினி

பேசினால் பயந்து ஓடுவாள் என்று எதிர்பார்த்தவனுக்கு அவளிடம் இருந்து வந்த கேள்வியால் இன்னும் கோபம் தலைகேறியது.. ..

ச்சே.. கொஞ்சம் கூட வெக்கபடாம பேசுற.. எத்தன நாள் என்கூட இதே மாதிரி சுத்தி இருப்ப.. என்று ஆரம்பித்தவன்.. மனதில் இருந்ததை எல்லாம் அவளிடம் நெருப்பு துண்டங்களாக கொட்டினான்.

இதெல்லாம் அமைதியாக கேட்டு கொண்டு இருந்தவளின் இதழ்களில் ஒரு சின்ன புன்சிரிப்பு.. விழிகளில் பரவசம்.. மற்றபடி அவளிடம் எந்த பதிலும் இல்லை..
இதை பார்த்தவனுக்கு இன்னும் கோபம் அதிகம் ஆகியது..

ச்சே.. என்ன ஜென்மம் நீ? இவ்ளோ பேசுறேன் கொஞ்சம் கூட மனசாட்சி உறுத்தாம சிரிக்கிற.. உன்னை போயா ரெண்டு வருஷம் உருகி உருகி காதலித்தேன்? ஒருத்தனுக்கு காதலியா துரோகம் பண்ணிட்டு இப்போ அடுத்தவனுக்கு மனைவியா அதையே செய்யறியே உனக்கு வெக்கமா இல்ல? தயவுசெஞ்சி உன் புருஷனுக்காது இனிமே உண்மையா இரு..

"இனி என் வாழ்நாள் முழுக்க நான் நினைச்சி கூட பார்க்க விரும்பாத ஒரே நபர் நீயா தான் இருக்க போற.." என்று சொல்லிவிட்டு அவள் பதிலை எதிர்பார்க்காமல் கதவை வேகமாக திறந்து வெளியே சென்றான்.

அவன் வெளியே சென்றவுடன். அந்த அறையில் இருந்த கண்ணாடி முன் நின்று.. மனதிற்குள் பேச தொடங்கினாள் ..
இல்ல சிவா.. நான் உங்களுக்கு துரோகம் பண்ணல.. நான் எப்படி சிவா எனக்கே துரோகம் பண்ணிக்க முடியும்?.
சிவா அன்னைக்கு நீங்க இருந்த நிலைமைல.. உங்க சொந்த வாழ்கையை பத்தி கவலைபடல.. என்னை கல்யாணம் செய்யணும் என்ற ஒரே குறிக்கோள் மட்டும் தான் உங்க மனசுல இருந்துச்சி.
எனக்காக நீங்க உங்களுக்கு வந்த வாழ்கைல உயர போகிற நல்ல சந்தர்பங்களை எல்லாம் உதறி தள்ள தயாரா இருந்திங்க..

ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு வாழ்கை இருக்கு.. நிதர்சன வாழ்கை.. அதற்கு காதல் மட்டும் பத்தாது சிவா.. கல்யாணத்துக்கு பின்னாடி நமக்குள்ள வர சின்ன சின்ன பிரச்சினைகளை கூட என்னால தாங்கிக்க முடியாது சிவா.

நான் ரசித்து ரசித்து உருகி உருகி காதலித்த.. காதலை மட்டுமே எனக்கு தந்த என் சிவா முகம் திருப்பி போறத என்னால நினைச்சி கூட பார்க்க முடியாது..

என்னோட சிவா வாழ்நாள் முழுக்க நல்லா இருக்கனும்.. என்னோட சிவா வாழ்கைய கெடுக்குற எந்த விஷயத்தையும் எதிர்க்க நந்தினி தயங்கமாட்டா..
அதுக்காக இந்த நந்தினி எதுவானாலும் செய்வா..
அவளையே விட்டு கொடுக்கறத கூட..
இதற்கு இந்த உலகம் என்னை ஆயரம் பேர் சொல்லி அழைக்கலாம்.. எனக்கு கவலை இல்லை ..
என்னை பார்த்து "இது தான் காதலா?" என்று கேட்கலாம்.
ஆம்.. என்னை பொறுத்தவரை "இதுவும் காதல் தான்".

Monday, February 22, 2010

டீன் ஏஜ் - நான்

டீன் ஏஜ் பருவம் பத்தி எழுத அழைப்பு விட்ருக்காங்க .. விசில் அடிச்சி கூப்பிட்டவன் வினோத்கெளதம்..

என்னோட டீன் ஏஜ் பத்தி சொல்லனும்னா..80% இனம் புரியாத காம உணர்வு.. 15% ஜாலி லைப்.. 5 % படிப்பு.. இதான் நான் நானா இருந்தது.. (பலருக்கும் இப்படி தான்னு நினைக்கிறன்.. ஆனா ஏன் சொல்ல மாட்றாங்கன்னு தெரியல ..)

13 வயசு..

சயின்ஸ் புக்ல இருக்குற பூச்சிகளின் இனபெருக்க முறையை படிச்சாலே ஒரு மாதிரி தான்.. பொண்ணுங்க பார்த்தாலே ஒரு கிளுகிளுப்பு.. பேசிட்டா காத்துல பறக்குற கதை தான்.. ( அந்த பேச்சும் வெறும் புக் வாங்குறது,, பேனா குடுக்குறதுன்னு .. சப்ப மட்டர் தான்.)

14 வயசு

சில சமயம் டிராயரும் சில சமயம் பாண்டும் அணிந்த காலம் அது.. என்னத்த சொல்ல...? அதுவரை உலகிலேயே மிக வசதியான உடையாக இருந்த டிராயர் அவ்வப்போது சங்கடமாக உணர வைத்த காலம் இது..

15 வயசு

அரும்பு மீசையும் உடலில் ஆங்காங்கே ஏற்பட்ட மாற்றங்களும் தனி திமிரை வர வைத்த காலம்.. அதுவரை யாரையும் அக்கா,அண்ணி , ஆண்டி என்று பழகிய எனக்கு.. எல்லோரும் ஒரே மாதிரி தெரிய ஆரம்பித்த காலம்..

16 வயசு

பிசிக்ஸ் மேம் போர்டில் ஒரு கையை உயர்த்தி பிடித்து கொண்டு நடத்திய பாடத்தை பற்றி " is it clear students?" என்று கேட்க போர்டில் இருப்பதை "மட்டும் " பார்க்காமல் "very clear " மேம் என்று ஜொள்ளுடன் பதில் உரைத்த காலம்..

17 வயசு

டேய் மச்சி சீனிவாசல " love cover girl" ன்னு ஒரு படம் வந்து இருக்குடா ஆரம்பம் முதல் கடைசி வரை டிரஸ் இல்லையாம் அப்படீயே காட்டுராங்கலாம் .. மதியம் போலாமா ? .-நான்

டேய் மதியம் ஆட்டோமொபைல் லேப் இருக்குடா.. நமக்கு lab incharge யாருன்னு தெரியும்ல g.v சார்.. அப்புறம் அடுத்த வாரம் கஞ்சி காச்சிடுவாரு -பார்த்திபன்

டேய் நான் விசாரிச்சிட்டேன் அவரு மதியம் வரலயம் அவரும் senior instructor -ரும் எதோ முக்கியமான வேலையா வெளில போய் இருக்காங்களாம் .. இன்னைக்கு s.p தான் incharge.. பாரு கார்த்தி கூட பார்த்தே ஆகணும்னு அடம் புடிக்கிறான். விட்டா அழுதுடுவான் போல இருக்கு.- நான்

ஆமா மச்சான் நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்லடா.. வாடா போலாம்.. ப்ளீஸ்.. - கார்த்தி

சரி வாங்க போலாம் - பார்த்திபன்

படம் போட ஆரம்பித்த 10 வது நிமிடம் கார்த்தி மெதுவாக.. மச்சான் அங்க பாரு g.v -யும் senior instructor -ரும் உக்கார்ந்து இருக்காங்க.. மச்சான் அவங்க கண்ணுல மாட்டுனா அவ்ளோ தான்.. கிளாஸ் போகாததுக்கும் இங்க அவனுங்கள பார்த்ததுக்கும் சேர்த்து ரிவெட் வைப்பாங்க.. போய்டலாம் என்று சொல்ல.. சத்தம் காட்டாமல் வெளியில் ஓடி வந்த காலம்..

18 வயசு.. & 19 வயசு..

அட படிக்கிற காலம்ங்க.. அதான் சொன்னேன்ல 5 % படிப்புன்னு..

தொடர விரும்புவோர் தொடரலாம்.. நான் அழைப்பது கண்ணா மற்றும் பப்பு..( ஆமா பப்பு உனக்கு டீன் ஏஜ் முடிஞ்சிடுச்சா?)

Monday, January 25, 2010

எங்கே செல்லும்.. பாகம் - 6

விசா வின் ஆலோசனையில் முகிலன் ஆரம்பித்து வைத்த கதையை பலாவும்,பிரபாகரும், ஹாலிவுட் பாலாவும் , வினோத்கௌதமும் தொடர.. தானே போய் உக்கார்ந்த கதையாய் இப்பொழுது நான்...

(
முழுசா படிக்க இந்த பக்கம் போங்க..உங்களுக்கு பிடித்த எபிசோடு எழுதிய நண்பர்களுக்கு, அவர்கள் ப்லாகில் பின்னூட்டுங்கள்.)
இனி ..
-----------------------------------------------------------------------------
விமானம் பறக்க தொடங்கி பத்து நிமிடங்கள் ஆகி இருந்தது.. அவனை அங்கேயே உக்கார சொல்லி விட்டு ராஜேஷ் எழுந்து டாய்லெட் சென்று விட்டு வந்து பார்த்த போது அவன் அதற்குள் தூங்கிவிட்டிருந்தான் .. ராஜேஷ் அவனை ஒரு முறை பார்த்து விட்டு கையில் இருந்த புத்தகத்தை புரட்ட துவங்கினான்.

அடுத்த இரண்டாவது நிமிடத்தில் விமானத்தில் அசாதாரண சூழ்நிலை உருவானதை போல தோன்ற அடுத்த நொடி இருக்கைக்கு மேல உள்ள விளக்கில் சீட் பெல்ட் அணிய வேண்டிய லைட் ஒளிர ஆரம்பித்தது.. பணிப்பெண்கள் வெளிறிய முகத்தோடு இயற்கை வனப்புடனும் செயற்கை சிரிப்புடனும் வந்து பயணிகளிடம் சீட் பெல்ட் அணிய சொல்ல ஆரம்பித்தார்கள்.

அதை தொடர்ந்து கேப்டனின் குரல்..

"dear passengers, we are returning to the chennai airport due to some techinical fault.
dont worry still flight is in control.
sorry for the inconvenience."

இது என்ன புது தலைவலி என்று நினைத்தவாறே ராஜேஷ் அவனை எழுப்பி சீட் பெல்ட் அணிய சொல்லிவிட்டு தானும் அணிய தொடங்கினான்.

அடுத்த பதினைந்தாவது நிமிடம் விமானம் சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கியது.. பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கபட்டு ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர். ஸ்பீக்கர்ரில் விமானம் இரண்டு மணி நேரம் தாமதமாக புறப்படும் பயணிகள் சிரமத்திற்கு மன்னிக்கவும் என்று ஆங்கிலத்தில் அலறி கொண்டு இருந்தது.

அவனுடன் ஓய்வறையில் இருந்த ராஜேஷ் தனது செல் எடுத்து நம்பரை அழுத்தினான் ..
சில நொடிகளில் மறுமுனை நேரடியாக

"நீ இன்னும் பிளைட் ஏறலியா ?" என்று பதற்றமாக கேட்டது .

"இல்ல பிளைட் கிளம்பி திரும்ப சென்னை ஏர்போர்ட் வந்துடிச்சி.. ஏதோ பிரச்சனையாம்.. இரண்டு மணி நேரம் ஆகும்" - ராஜேஷ்

"ஓ! அவன் என்ன பண்றான்?"

"இதுவரைக்கும் ஒன்னும் பிரச்சனை இல்லை "- ராஜேஷ்

" சரி சொன்னது நியாபகம் இருக்குல்ல? அங்க போற வரைக்கும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை அவனுக்கு குடிக்க தண்ணி மட்டும் குடு .. அவன் தூங்குனாலும் எழுப்பி குடு.. வேற எதுவும் குடுத்துடாத.. மறந்துடாத இல்லனா அவனுக்கு உள்ள இருக்குற மருந்து தன்னோட வேலைய காட்ட ஆரம்பிச்சிடும்."

"ம்ம்.. நியாபகம் இருக்கு.. போற வரைக்கும் வரைக்கும் தாங்குவானா? இன்னும் கொஞ்சம் ஓவர்டோஸ் குடுத்து இருக்கலாமோ? "- ராஜேஷ்

"அவன செக் பண்ணி தான் குடுத்து இருக்கோம்.. இப்போ அவன் உடம்புல ப்ரபோனோனல் மட்டும் இல்ல புரிஞ்சிதா ? நீ சொன்னத மட்டும் செய்..
கிளம்பறதுக்கு முன்னாடி போன் பண்ணு"

"சரி" என்றான் ராஜேஷ்

மறுமுனை கட் ஆனது.
--------------------------------------------------------------------------

"சாரி சார்..எனக்கு நாளைக்கு மிக முக்கியமான வேலை இருக்கு.. வேணும்னா இன்னைக்கு வந்து உங்களை சந்திக்கலாமா ?"- ஸ்வாதி

"ஓகே வாங்க.. எப்போ வருவிங்க?" - ஆவுடையப்பன்

"சார். நான் கொஞ்சம் ஏர்போர்ட் வரைக்கும் போக வேண்டி இருக்கு கசின் ஊருக்கு போறா அவளை அனுப்பிட்டு அப்படியே வந்துடுறேன்.."

"சரி.. முடிஞ்ச அளவுக்கு சீக்கிரம் வர முயற்சி பண்ணுங்க"

"சரி சார்.." என்ற ஸ்வாதி குழப்பத்துடன் அழைப்பை துண்டித்தாள் .

------------------------------------------------------------------------
ஒரு மணிநேரம் ஆகி விட்டிருந்தது ..

ராஜேஷ் தன்னிடம் இருந்த தண்ணி பாட்டிலை எடுத்து அவனிடம் கொடுத்து குடிக்க சொல்ல அவனிடம் திரும்பினான்..
தலை கவிழ்ந்து உக்கார்ந்திருந்த அவனிடம் இருந்து மெல்லிய பேச்சு சத்தம்..
ராஜேஷ் அவன் பக்கத்தில் வந்து உன்னிப்பாக கேட்டான்.

எதுவும் புரியவில்லை..

என்ன இது இவன் பேசுறான்? போற வரைக்கும் எதுவும் பேசமாட்டான்னு சொன்னானுங்க .. என்னஆச்சி ? மருந்து வேலை செய்யலியா?
மெல்ல அவன் தாடையில் கை கொடுத்து அவன் முகத்தை நிமிர்த்திய ராஜேஷ் அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றான்.
--------------------------------------------------------------------------
அதே நேரம் ஏர்போர்ட் வாசலில்..

"சார் நான் ஏர்போர்ட் வந்துட்டேன்.. இன்னும் அரைமணி நேரத்துல இங்க இருந்து கிளம்பிடுவேன். நேரா உங்கள வந்து பார்கிறேன் என்று இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பனுக்கு தகவல் தெரிவித்தபடியே காரில் இருந்து இறங்கிகொண்டு
இருந்தாள் ஸ்வாதி ..
-------------------------------------------------------------------------
இவன எங்கயும் தனியா விடலையே .. இவன் கூடவே தான இருக்கேன்.. எங்க தப்பு நடந்துச்சி? என்று யோசித்தபடி.."ஹேய்.. என்ன ஆச்சி உனக்கு? " அதிர்ச்சியில் இருந்து மீளாத ராஜேஷ் அவனிடம் கேட்டான்.

அவன் கண்கள் இரண்டும் சிவந்து போய் இருக்க.. அவன் மூக்கில் இருந்து மெல்லிய கோடு போல ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது.. நிமிர்ந்த அவன் ராஜேஷ் கண்களை பார்த்து அதே வார்த்தைகளை முனகினான் ..இப்பொழுது அவன் சொல்வது கொஞ்சம் தெளிவாக கேட்டது..

அ.. ர்.. ஜூ .. ன்..

அ.. ர் .. ஜூன்..

அர்.. ஜூன்..

அர்ஜுன்..

(தொடரும்)..
தொடரபோவது நண்பர் சுபதமிழினியன்.. வாழ்த்துக்கள் :)


------------------------------------------------------------------------------
டொய்ங் : முடிந்த வரை 10 பாகதிற்க்குள் முடிக்க பாருங்க.. அப்போ தான் விறுவிறுப்பா இருக்கும் அடுத்தது தொடங்கவும் வசதியா இருக்கும் . இல்லனா டெலி சீரியல் மாதிரி ஆகிட போது..

யாருக்கு முதலில் எழுத விருப்பமிருந்தாலும் இங்கே துண்டை போட்டு இடம்பிடிச்சிடுங்க. கதையை அடுத்த ஏரியாவுக்கு கொண்டு செல்வது உங்க பாடு. :-) ]

விதிகள் :

01. தொடர விரும்புபவர்கள் கடைசியாக யார் எழுதியிருக்கிறார்களோ அந்தப்பதிவில் சென்று பின்னூட்டம் இடுங்கள்.
02. ஒருவருக்கும் மேல் ஒரே நேரத்தில் விருப்பம் தெரிவித்தால், கடைசியாகப்பதிவை எழுதியவர் யார் தொடரலாம் என்பதை தேர்ந்தெடுப்பார்.
03. முந்தைய பாகங்களுக்கான சுட்டியையும், அடுத்த பாகத்தின் சுட்டியையும்யாரவது தொடர்ந்த பின்னர்) பதிவில் கட்டாயமாக இட வேண்டும்.
04. ஒரு எச்.டி.எம்.எல் கேட்ஜட் உருவாக்கத்தில் இருக்கிறது. உருவான பின்அதையும் உங்கள் வலைப்பூவில் கட்டாயம் சேர்க்க வேண்டும்
05. மேலே உள்ள விதிகள் அனைத்தும் தொடர் பாகத்தை ஒருவருக்குமேற்பட்டவர் எழுதி விடக்கூடாது என்பதற்காகவே.