Thursday, July 29, 2010

இப்போ நான் என்ன செய்ய?

நேற்று மதியம் ஒரு முக்கிய வேலையாக புதுச்சேரி செல்ல வேண்டி இருந்ததால் அலுவலகத்திற்கு அரை நாள் விடுப்பு கொடுத்து விட்டு கிளம்பினேன் .

பைக்கை பஸ்ஸ்டாண்டில் விட்டுவிட்டு கடலூர் செல்ல தயாராக இருந்த அரசு பஸ்சில் ஏறி அமர்ந்து மொபைலில் பாட்டு கேட்க தொடங்கினேன்.
பொதுவாகவே சிதம்பரத்தில் இருந்து கடலூர் செல்லும் போது தனியார் பேருந்துகளை விட அரசு பேருந்தில் பயணம் செய்வதை விரும்புவேன். முன்னாடி போ , பின்னாடி போ , இன்னும் நகர்ந்து உக்காரு போன்ற தொல்லைகளும், போகும் ஒரு மணி நேரத்திற்கு அதிக படியான சவுண்டில் ஓடும் திரைப்படங்களும் இல்லாமல் ஏறுபவர்களை மட்டும் ஏற்றி கொண்டு செல்லும்.. ஆதலால் நிம்மதியாக பயணத்தை அனுபவிக்க அரசு பேருந்தில் பயணம் செய்வேன்.

பஸ் கிளம்பி 5 நிமிடத்தில் ஒரு சிறுமியும் (?) விடலை பையனும் ஏறினார்கள். கண்டிப்பாக கடலூரில் இருந்து வந்து சிதம்பரத்தில் பொழுதை கழித்து (!!!!!???) விட்டு பள்ளி முடியும் நேரம் கடலூர் செல்கிறார்கள் . அந்த பெண் பள்ளி சீருடையில் இருந்தாள். உடலில் உள்ள இளமை தோற்றத்தையும் மீறி முகத்தில் ஒரு குழந்தை தனம் தெரிந்தது. பையன் முகத்தில் பக்கா பொறுக்கி கலை.. பத்தாதற்கு வாயில் புகையிலை வேறு அழுத்தி இருந்தான்.

மதியவேளை என்பதால் பஸ்சில் கூட்டம் இல்லை.அங்கொன்றும் இங்கொன்றுமாக பத்து பேர் மட்டுமே இருந்தோம். ஏறுன சனியனுங்க என் கண் எதிர்லையா வந்து உக்காரணும்?

டிக்கெட் எடுத்த சில நிமிடங்களில் ஆரம்பித்தது இவனின் பொறுக்கிதனம். அவளின் உடல் முழுவதும் அவனின் கைகள் விளையாட ஆரம்பித்தது. அதை விட கொடுமை உச்சகட்டமாக அவன் அவளின் கையை எடுத்து தன் "மடியில்" வைத்து கொண்டது தான். அவள் வெட்கத்தாலும் கூச்சதாலும் சில சமயம் அவன் கைகளை தட்டி விட்ட போதும் அந்த உணர்வுகளை ரசித்த படி அவனுடன் நெருங்கி அமர்ந்து இருந்தாள்.

எழுந்து போய் ஓங்கி அறையலாமா என்று கோபம் வந்தது. அதை பார்த்தால் கோபம் அதிகம் ஆகும் என்று முகத்தை திருப்பி கொண்டேன்..ஆனாலும் மனசு எங்க கேக்குது? திரும்ப திரும்ப பார்க்க வைத்தது .

ஒரு மதிய வேளையில் பல பேர் பயணம் செய்யும் பேருந்தில் ஒரு ஆடவன் தன்னிடம் எல்லை மீறி செய்யும் செயலை அனுமதிக்க அவளுக்கு இந்த வயதில் எப்படி தைரியம் வந்தது? இங்கயே இப்படி செய்பவன்.. தனிமையில் என்னவெல்லாம் செய்து இருப்பான்? ஊடகங்களும் திரைப்படங்களும் தான் காரணம் என்று பொதுவாக சொல்வதை என்னால் ஏற்று கொள்ள முடியாது.

வயதிற்கு வந்த பெண் பெற்றோரையும் பள்ளியையும் ஏமாற்றி விட்டு வருவது அவ்ளோ ஈஸியான விஷயமா? இதற்கு முழுமுதற் காரணங்கள் அவளின் பெற்றோர்களும் பள்ளி நிர்வாகமும் தான்.

ஒரு வழியாக யாரை பற்றியும் எந்தவித கவலையும் இன்றி இவர்களின் "ஓரல் செக்ஸ்" கடலூர் வரை தொடர்ந்தது. அவர்கள் ஜன்னலோரம் அமர்ந்து இருந்தலால் அவளின் புத்தக பை என் இருக்கையின் அருகில் இருந்தது. பையின் வெளியே நீட்டி கொண்டு இருந்த நோட்டில் இருந்த லேபிளில் உள்ள பெயரை படித்தேன்.. கடலூரில் உள்ள கண்டிப்புக்கு பெயர் போன ஒரு பிரபலமான பள்ளி. அவளின் பெயரும் அவள் 9 ஆம் வகுப்பு படிக்கிறாள் என்பதும் இருந்தது. வழக்கம் போல் ஒரு சிறந்த இந்திய குடிமகனாக எவனாவது எப்படியாவது போகட்டும் என்று ஊர் வந்ததும் இறங்கி விட்டேன்.


இருந்தாலும் நேற்றில் இருந்து அந்த பெண்ணின் குழந்தை முகமும்.. வயதும்.. தப்பு பண்ணி விட்டமோ? ஓங்கி அறைந்து கேட்டு இருக்கலாமோ என்று தோன்றுகிறது. இப்பொழுது நேரடியாக கேக்க முடியாவிட்டாலும் அவளின் பள்ளிக்கு தகவல் தெரிவித்து அவள் பெற்றோர் மூலம் கண்டிக்க சொல்ல வேண்டும் என்ற எண்ணமும் அவ்வபொழுது எழுகிறது. அதே சமயம் இதனால் எழும் பிரச்சனையில் அவள் வயது எந்த முடிவையும் எடுக்க தயங்காது என்று நினைக்கும் பொழுது, சும்மா இருக்க சங்க எதுக்கு எடுத்து ஊதுற ? பஸ்ல போனோமா சீன பார்த்தோமான்னு இருடா உனக்கு எதுக்கு தேவை இல்லாத வேலை? என்றும் நினைக்க தோன்றுகிறது. இப்போ நான் என்ன செய்ய?

Wednesday, July 21, 2010

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா ..

புதுச்சேரி என்ற ஊருல ஒரு கிளி இருந்துச்சாம், அதுக்கு கல்யாண வயசாகியும் ஜோடி கிளி கிடைக்காம ரொம்ப ஏக்கத்துல இருந்துச்சாம். அதனால அப்போ அப்போ அந்த கிளி அங்க இருந்து கிளம்பி பக்கத்துக்கு ஊரான சிதம்பரத்துல இருக்குற அதோட பிரண்ட் கிளிய போய் பார்த்து புலம்புமாம்.

இந்த கிளி புலம்புறத தாங்க முடியாத பிரண்ட் கிளி அந்த கிளிக்கு பருக மோரும்.. நீரும்.. தந்து சமாதானபடுத்துமாம். அதுலயும் சமாதானம் ஆகாத அந்த கிளி மோரையும் நீரையும் கலந்து "பருகிட்டு" பிரண்ட் கிளிய பார்த்து ஏன்டா எனக்கு இன்னும் ஜோடி கிடைக்கலன்னு.. காரணமே இல்லாம திட்டுமாம்.

இப்படி ஜோடி இல்லாம இது ஊருக்குள்ள பண்ற அழும்ப பார்த்த பெத்தவங்க கிளிங்க ரெண்டு பெரும் இதை இங்க வச்சிருந்தா "ஊருக்கு" ஆகாதுன்னு அந்த கிளிய வீட்ட விட்டு ரொம்ப தூரத்துல போய் இரை தேட அனுப்பி வச்சாங்களாம் .

வீட்ட விட்டு பிரிஞ்சி போன ஒரு பாலைவானத்துல போய் தங்குச்சாம் . அந்த பாலைவனத்துல தினமும் நேரம் காலம் பார்க்காமல் உழைச்சி இரை தேடுவதற்கு ரொம்ப கஷ்டபட்டுச்சாம். அதை பெத்தவங்க கிளிகிட்டையும் அதோட பிரண்டு கிளிகிட்டயும் தினமும் தகவல் குடுத்து ஒரே அழுகாச்சியாம்.

இது சீன் போட்டத உண்மைன்னு நம்புன பெத்தவங்க கிளி ரெண்டு பெரும் இந்த கிளிக்கு ஒரு ஜோடி கிடைச்சிட்டா சரி ஆகிடும்னு ஒரு அழகான பெண் கிளிய பார்த்து முடிவு பண்ணி இந்த கிளிகிட்ட சம்மதம் கேட்டாங்களாம் .அது பத்தாதுன்னு பிரண்ட் கிளி வேற இந்த கிளிகிட்ட அதோட விருப்பத்த பத்தி கேட்டுச்சாம் .

ஆரம்பத்துல ரொம்ப ஓவரா சீன் போட்ட அந்த கிளி..எதுவா இருந்தாலும் அந்த பெண் கிளி கிட்ட பேசுனதுக்கு அப்புறம் தான் முடிவு எடுக்க முடியும்னு சொன்ன அந்த கிளி.. ஊர்ல இருக்கும் போது வீட்டுக்கு வராம ஊரு சுத்துன அந்த கிளி.. இப்ப அந்த பெண்கிளி கிட்ட பேச ஆரம்பிச்சதும்...

ஹலோ.. .ஹலோ .. ஸ்டாப்..ஸ்டாப்.. ஹோல்ட் ஆன்..

எவனாவது கதை சொன்னா "உம்" கொட்டி கேட்டுகிட்டு இருப்பிங்களா ?
கிளி கதை கேக்குற வயசா உங்களுக்கு? வேற என்ன செய்யனுமா?

என்னங்க இப்படி கேட்டிங்க? இன்னைக்கு என்ன நாள் தெரியுமா? என்னது தெரியாதா? அட வாங்க.. எவ்ளோ முக்கியமான நாள் இன்னைக்கு.. அதை விட்டுட்டு கிளி கதை எல்லாம் கேட்டுகிட்டு..

22. 07 .2010 . என் நண்பன்
வினோத் கெளதம் -க்கு
பிறந்த நாள்....

இந்த சந்தோசம் உன் வாழ்வில் என்றும் நிலைத்திருக்க..

நீ விரும்பும் அனைத்தும் உன் வாழ்வில் கிடைக்க என்றும் இறைவனை பிராத்திக்கிறேன் .


இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா ...

WISH YOU A VERY HAPPY BIRTHDAY DA MACHAN..

இந்த வருஷம் தான் பேச்சுலரா பிறந்த நாள் கொண்டாடுவான்.. அடுத்த வருஷம் முதல் அவனுக்காகவே படைக்கபட்ட கடவுளின் வரமான பெண்ணுடன் தம்பதி சகிதமாய் கொண்டாடுவான்.

உங்களுடைய ஆசிர்வாதங்களையும் வாழ்த்துக்களையும் கஞ்சதனம் பண்ணாம அவனுக்கு நிறைய நிறைய வாரி வழங்குங்கள்.

Friday, July 16, 2010

மாறுபட்ட கண்ணோட்டத்தில் மதராசப்பட்டினம்


நேற்று
நண்பர்களுடன் பார்த்தேன் .. படத்தை பற்றி பல விமர்சனங்கள்.. டைட்டானிக் போல இருக்கு லகான் போல இருக்கு என்று ஏகபட்ட செய்திகள். சில காட்சிகள் அதை நினைவுபடுத்துவதாக இருந்தாலும் படம் முழுவதும் ஒன்றி பயணிக்க முடிகிரறது. கதை பற்றி எல்லாம் ஏற்கனவே படித்து இருப்பீர்கள். அதனால் எனக்கு பிடித்த சில விஷயங்கள் மட்டும் ..

கலை, ஒளிபதிவு, ஆர்யா, எமி ஜாக்சன், நாசர்,அமரர் ஹனிபா, எம்.எஸ்.பாஸ்கர், பாலாசிங், ஆர்யாவின் நண்பர்கள் என்று பலரின் கடின உழைப்பு திரையில் தெரிகிறது . ஆனால் இவர்களையும் மறக்க செய்து படம் முழுவதும் ரணகளபடுத்தி ஆடி இருப்பவர்கள் இசை அமைப்பாளரும் எமி ஜாக்சனின் வயதான வேடம் ஏற்று இருக்கும் நடிகையும் தான்.

இசைஅமைப்பாளர் பாடல்களை விடவும் சிறப்பாக பின்னணி இசையில் கதையோடு பயணம் செய்ய வைக்கிறார்.

வயதான அந்த நடிகை வெறும் முக அசைவுகளில் அவரின் எண்ண ஓட்டங்களை நமக்கு புரிய வைத்து விடுகிறார். ஆர்யாவை தேடி அலையும் போது அவருக்கு கிடைக்கும் ஒரே நம்பிக்கையான ஆர்யாவின் நண்பர் கபீர்- பார்த்தவுடன் வரும் பரவசம்..அடுத்த நிமிடமே அவர் இறந்து போகும் போது நம்பிக்கை பொய்த்து போய் மனம் உடைந்து விடும் கண்ணீர்.. இருந்தாலும் அடுத்த கணமே ஆர்யாவை மீண்டும் சந்திப்போம் என்று முகத்தில் காட்டும் தன்னம்பிக்கை.. ஆர்யாவின் முகவரி கையில் கிடைத்தவுடன் அதை வைத்து கொண்டு அவரின் வயதுக்கு மீறிய துள்ளலுடன் ஒரு நடை.. ஆர்யா சமாதி முன் வரும்போது அவரின் வயதுக்குரிய தள்ளமையுடன் வந்து அமர்வது என்று கடைசி 30 நிமிடங்கள் மிகை படுத்தாமல் அதே சமயம் தன்னுடைய நடிப்பு திறமையை எவருக்கும் விட்டு கொடுக்காமல் அமைதியாக அடித்து ஆடி இருக்கிறார்.

ஆனால் எந்த விமர்சனத்திலும் இவரை பற்றி யாரும் குறிப்பிட்டதாக தெரிய வில்லை. morgan freeman போன்றோர் ஆங்கில படங்களில் கதை முழுதும் சுமந்து நடிப்பது பற்றி சிலாகித்து எழுதும் நாம் நமது மொழியில் அது நடக்கும் போது அதை பற்றி ஏன் கண்டு கொள்ளவது இல்லை என்று தெரியவில்லை.
அவரின் பெயர் தெரிந்தால் சொல்லுங்கள்.

ஆனால் எல்லோரையும் ஆட்டுவித்தவர் இயக்குனர்.. வெள்ளைகார இளமை ப்ளஸ் அழகு கொஞ்சும் ஹீரோயின்.. இளமை கட்டுடலுடன் ஒரு ஹீரோ.. அவர்களுக்குள் காதல் என்று இளமை மசாலா சமாச்சாரங்கள் தூவ பல இடங்களில் வாய்ப்பு இருந்தும் கவர்ச்சியை நம்பாமல் கதையை நம்பி எடுத்து இருக்கிறார். முகம் சுளிக்க வைக்கும் அங்க அசைவுகளோ தேவையற்ற ஆபாச காட்சிகளோ இல்லாமல் எடுத்து இருப்பது நிறைவை தருகிறது.

எனக்கு தெரிந்து கடைசியாக படத்தில் கதாநாயகன் கதாநாயகி இல்லாமல் படத்தின் இறுதி காட்சிகளை ஒரு சப்போர்டிங் ஆர்டிஸ்ட் கொண்டு நிறைவாக செய்தது சுப்ரமணியபுரம் படத்தில் தான்.. அதில் கஞ்சாகருப்பை சுற்றி படத்தின் கடைசி 10 நிமிடங்கள் இருக்கும். அதன் பிறகு இதில் தான் பார்கிறேன். இயக்குனர் விஜய்க்கு ஒரு லைப் டைம் மூவி.

சிங்கம்,புலி,சுறா, எறா, நண்டு, நண்டுவாக்களின்னு போய்கிட்டு இருக்கும் தமிழ் சினிமாவில் ஒரு வரவேற்க வேண்டிய முயற்சி. காட்சிகளின் அழுத்தத்தை உணர கண்டிப்பாக திரை அரங்கில் சென்று பாருங்கள் .

Wednesday, July 14, 2010

ஷ்ஷ்ஷ் .... இது ரகசியம் - 1

வணக்கம் ... எனக்குள்ள ரொம்ப நாளா ஒரு ஆசை.. ஏன் வெறின்னு கூட சொல்லலாம்.. ஒரு தொடர்கதைய எழுதிபுடனும்ணு.. நல்ல படிங்க.. அது தொடர்கதை தான் தொடர்பதிவு இல்ல.. நீங்க பாட்டுக்கு அ, ஆ.. எ ,பி, சி ,டி .. பிடிச்சது, கடிச்சதுன்னு எழுத கூப்பிடாதிங்க .. ஆமா அப்படியே என்னைய மதிச்சி நீங்க கூபிட்டுடாலும் ..

சரி விஷயத்துக்கு வருவோம்.. தொடர் எழுதுறதுன்னு முடிவு ஆகி போச்சி.. அது நெடுந்தொடரா ..குறுந்தொடரா.. இல்ல மிடுந்தொடரா.. ( அதாங்க பாதில நிறுத்துறது... எப்புடி ? நாங்களும் செம்மொழி மாநாட்டுக்கு லீவ் போட்டுட்டு பிக்னிக் போன பய பக்கிங்க தான்.. ) அப்படின்னு யோசனை வந்தப்ப
சரி கழுத எழுதுறது தான் எழுதுறோம்.. பல பய புள்ளைங்களுக்கு புடிச்ச மாதிரி இல்லைனாலும் சில "சில்வண்டு " புள்ளைங்களுக்கு புரியுற மாதிரி எழுதி வைப்போம்னு இந்த மிடுந்தொடர ஆரம்பிக்கிறேன்..

ஒரு நிமிஷங்க நம்ம கனகாவோட அப்பா பூஜைய நடத்தி முடிச்சதும் கதைய ஆரம்பிக்கலாம்..

நடிகர் ஷண்முகசுந்தரம்: ஆத்தா..மகமாயி.. ஆயரம் கண்ணு உடைய கண்ணாத்தா எங்கள காக்க வந்த காளிஆத்தா.. நம்ம புள்ள கிஷோர் புதுசா ஒரு மிடுந்தொடர ஆரம்பிக்க போகுது.. புதுசா கதை எழுதுறவன பழைய எழுதாளனுங்க மிதக்கிறது ச்சே.. மதிக்கிறது தான ஆத்தா மரியாத? அதனால நீ தான் கிஷோர்க்கு பக்க பலமா நீ இருந்து அந்த புள்ளைய காரி துப்புரவங்க , செருப்பால அடிக்கிறவங்க, எதிர் பதிவு போடுறவங்க கிட்ட இருந்து நீ தான் காப்பாத்தனும் .. எல்லோரும் நல்லா இருக்கனும் தாயி..

ட்ரைலர்....

இந்த தொடர் கதைய படிக்கச் முன்வந்த அணைத்து தைரியசாலிங்களுகும் என்னோட அசால்டான வணக்கங்கள்..

நீங்கள் தொடர்ந்து படிக்கச் போகும் இந்த கதையின் அத்தியாயங்கள் வழக்கமான காதல் ,மோதல் ,பிரிவு ,உறவு ,உணர்சிகள் அடங்கிய வழக்கமான பாணி கதைகள் அல்ல.

பொதுவாக பெற்றோர் - குழந்தைகள், கணவன் - மனைவி, காதலன் - காதலி, குடும்பங்கள் - உறவுகள் இடையில் எவ்ளவோ கருத்துக்கள் அதில் வேறுபாடுகள், மோதல்கள் ஆனால் இவை அனைத்தும் கலந்தாலோசித்து பேசுவதன் மூலமாகவோ அல்லது வேறு ஒரு மூன்றாம் நபரால் இயல்பாக மிக சுலபமாக தீர்த்து கொள்ள கூடிய விஷயங்கள்..

ஆனால் இது இரு நண்பர்களுக்கு இடையில் நடக்கும் நம்பிக்கை போராட்டம் பற்றிய தொடர்..

இரு நண்பர்கள் இடையே உண்மையும் நம்பிக்கையும் எவ்வளவு தூரம் பயணிகிறதோ தூரம் அதே அளவு தூரத்தை அவர்கள் காக்கும் ரகசியமும் பயணிக்கும்.

அப்படி கல்யாணம் ஆகாத இரு இளைஞ்சர்கள் இடைய உருவான நட்பில் உள்ள "நம்பிக்கை" "ரகசியங்களை " அலசி ஆராயும் தொடர்.



அத்தியாயம் -1



கிருஷ் ... ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் நடுத்தர வர்கத்து வாலிபன். அழகானவன் அறிவானவன் ஒழுக்கமானவன் குறைவாய் பேசுபவன் என்று அவனை பற்றி விவரிப்பதற்கு இரண்டு மூன்று அத்தியாங்கள் தேவைபடும். ஆதலால் .. சுருக்கமாக.. அவன் கடந்து செல்லும் போது ஒரு முறையாவது அவன் பார்வை நம் மேல் விழாதா என்று ஏங்காத பெண்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.. அப்படி ஏங்கதவர்கள் திருமணம் ஆகி இருப்பார்கள் அல்லது பார்வை இழந்தவர்களாய் இருப்பார்கள்.

விமல்... எப்பொழுதும் பேசிக்கொண்டு இருப்பவன்.. வேலை, அறிவு, ம்ம்... ஒழுக்கம் இவை அனைத்திலும் கிருஷை போலவே இருப்பவன் .. அழகில் பிரம்மனின் சலுகையை கொஞ்சம் அதிகமாக பெற்று கொண்டவன்.

பள்ளி காலம் முதலே இவர்களை போலவே இவர்களின் நட்பும் வளர்ந்து கொண்டு இருக்கிறது..

அதிகாலை 4.30 மணி..

செல் போன் தொடர்ந்து அழைக்க.. தூக்கத்தில் இருந்து கண்ணை விழிக்க விரும்பாத கிருஷ்.. கண்ணை மூடிய படி செல்போன் -ஐ எடுத்து காதுக்கு கொடுத்து ஹலோ என்றான் ..

"டேய் மச்சான் நான்தாண்டா.. "- விமல்

"சொல்லுடா என்ன இவ்ளோ காலைல போன்?" -கிருஷ்

"டேய்.. அது.. அது.."

"என்னடா? சீக்கிரம் சொல்லி தொல தூக்கமா வருது.."

"டேய் எப்படிடா சொல்லுவேன்?"

" ஐயோ காலைல படுத்தாதடா சொல்லு"

"டேய் எனக்கு போன்ல எப்படி சொல்றதுன்னு தெரியுல.. நீ எழுந்து குளிச்சிட்டு ரெடியா இரு .. நான் வீட்டுக்கு வரேன்.. நாம இன்னைக்கு திருச்சி போறோம்.. "

"டேய் என்னடா திடிர்னு.. இன்னைக்கு ஒரு நாள் தான் லீவ்.. அதுலயும?" - சலிப்புடன் கிருஷ் கூற..

"டேய் விஷயம் தெரிஞ்சா இப்படி சாதரணமா கேக்கமாட்ட?" என்றான் விமல்

"அப்போ என்ன விஷயம்னு சொல்லி தான் தொலையேன்.."

"அது.. அது.. வந்து.. மேகா .."

"என்னது ... மேகாவா .. ?

படுக்கையை விட்டு எழுந்த கிருஷ் முகத்தில் வியர்வைகள் முத்தாய் சிதறி கிடக்க அவன் கண்களின் பயம் பரவி கிடந்தது..


தொடரும்..

Monday, July 12, 2010

மிருதுவாய் ஒரு முத்தம்..

நரேனுக்கு போன் பேசி வைத்ததும் இந்த நொடியே வீட்டில் இருக்க வேண்டும் போல் தோன்றியது.. காரணம் வர்ஷிதா..

பெயரை நினைக்கும் போதே மனசுக்குள் பட்டம்பூசிகள் பறந்தன.

என்ன செய்ய? இன்னும் முழுசா ஐந்து மணி நேரம் இருக்கு.. புதுச்சேரி போய் சேர்வதற்கு.. நேற்று இரவு எட்டு மணிக்கு விசாகபட்டினத்தில் இந்த ரயில் பயணம் ஆரம்பம் ஆனது.. தப்பு பண்ணிட்டமோ..? பேசாம சென்னை வரை பிளைட்ல வந்து இருக்கலாமோ? இதுக்கு போய் எவன் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்ன்னு பேரு வச்சான்? ச்சே.. அடுத்த தடவ இந்த மாதிரி தப்பு பண்ண கூடாது.. இல்ல.. இல்ல.. இனிமே அவளை பிரிஞ்சி வரவே கூடாது.

எண்ணங்கள் பலவாறு சிந்தனை ஓட்டத்தில் பறந்து செல்ல.. அவன் எண்ண ஓட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் புதுச்சேரி செல்லும் ரயில் அதற்கு உரிய நேரத்தில் உரிய நிறுத்தங்களில் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது.

பெட்டியினுள் ஏசி காற்று மிதமாக பரவி கிடக்க தலையணை எடுத்து முதுகிற்கு கொடுத்த படி ஜன்னலோரம் சாய்ந்து கண்ணாடி வழியே கடந்து செல்லும் காட்சிகளை பார்த்தபடி வர்ஷிதாவின் நினைவுகளில் மூழ்கினான்.

வர்ஷிதா..

அழகு தேவதை.. தேவதை? இந்த வார்த்தை வர்ணனை கூட அவளின் அழகில் தோற்று விடும் என்பதே நிஜம்..

அவளின் காற்றில் சிரித்தாடும் கருங்கூந்தல் ஆகட்டும்..

கோபம் வரும் சமயங்களில் இடுப்பில் கை வைத்து உதட்டை சுழித்து பெரிய கண்கள் கொண்டு முறைப்பது ஆகட்டும் ..

ரோஜா இதழ் .. இல்லை அதை விட நிறமுள்ள இதழ் திறந்து வெண்ணிற பற்கள் தெரிய சிரிப்பது அகடும்..
அப்படி சிரிக்கும் பொழுது அவள் இரு கன்னங்களில் விழும் குழிகள் ஆகட்டும்..

எதை சொல்ல.? இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவளின் அந்த கன்னக்குழியில் விழுந்தவன் தான் இது வரை எழ முடியவில்லை.. எழவும் விரும்பவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக அவளை பிரிந்து ஒரு வார பயணம்.ஒவ்வொரு நாட்களும் ஒரு யுத்த களத்தை சந்திப்பது போன்று.. ச்சே.. திரும்பவும் வாழ் நாளில் இப்படி ஒரு வேதனையை அனுபவிக்க நான் தயாராக இல்லை என்று மனதிற்குள் சொல்லி கொண்டான்.

ரயில் இபோழுது விழுப்புரத்தை வந்தடைந்திருந்தது.. இன்னும் 40 நிமிஷம் பின் வீட்ற்கு ஒரு 10 நிமிட பயணம்.. முள் படுக்கை என்றால் என்னவென்று உணர்ந்த நொடிபோழுதுகள் அவை.

என்னதான் தினமும் தொலை பேசியில் பேசினாலும் அவளும் ஏங்கிதான் போய் இருப்பாள்..பேசும் பொழுது அவள் குரலிலே தெரிந்ததே.. வீட்டிற்கு போனதும் அவளை இறுக கட்டி விட்டுப்போன ஒரு வாரத்திற்கும் சேர்த்து முத்த மழை பொழிய வேண்டும்..

ஒரு வழியாக பிற்பகல் இரண்டு மணிக்கு புதுச்சேரி ரயில் நிலையம் வந்தடைந்து, அரக்க பரக்க ஆட்டோ பிடித்து வீட்டிற்கு சென்று காலிங் பெல் அடித்தான்..

வந்து திறப்பதற்குள் மீண்டும் ஒரு முறை அடித்தான்.. அதுவும் பொறுக்க முடியாமல் வர்ஷிதா என்று கத்தினான்.

சில கணங்களில் கதவை திறந்து வெளிபட்டாள் அவள்.. வர்ஷிதா.. உண்மையாகவே தேவதை தான்..

"வர்ஷிகுட்டி.............." என்று கத்தியவாறு கதவை கூட மூடாமல் அவளை அள்ளி எடுத்து முத்த மழை பொழிய ஆரம்பித்தான்..

அம்மா... அம்மா.. இங்க வா... வந்து பாரு.. அப்பா...... மழலை மொழியில் அம்மாவை அழைத்தவள் அவன் கன்னங்களில் மிருதுவாய் ஒரு முத்தம் பதித்தாள்.